Advertisements

அன்புமனி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக அணி திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் புதிய கூட்டணிக் கணக்குகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான அணி, ஆளுங்கட்சியான திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய முடிவெடுத்தது. இந்த முடிவை “சட்டவிரோதமானது” என்று விமர்சித்த மருத்துவர் ராமதாஸ், தாமே கட்சியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்று அறிவித்தார். இதனால் பாமக தற்போது இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.
தைலாபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விருப்ப மனு விநியோக நிகழ்வில், திமுக அரசின் செயல்பாடுகளை மருத்துவர் ராமதாஸ் பாராட்டிப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி ராமதாஸ் தலைமையிலான அணியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் ராமதாஸ் அணிக்கு 5 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், பாமக வேட்பாளர்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியில் ராமதாஸ் தரப்பில் சில முக்கியப் பெயர்கள் அடிபடுகின்றன. பாமகவின் மூத்த தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ அருள், மருத்துவர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் விசிக (திருமாவளவன்) போன்ற கட்சிகள் இருக்கும் நிலையில், ராமதாஸ் தரப்பு இணைவது தேர்தல் களத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும். அடுத்தாக தனது சொந்தக் கட்சிச் சின்னமான ‘மாம்பழம்’ சின்னத்தைத் தவிர்த்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு கடினமான முடிவாகவே இருக்கும். அதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதும் சந்தேகமே.
இதுவரை இந்தத் தகவல்களை திமுகவோ அல்லது ராமதாஸ் தரப்போ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும், “தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று ராமதாஸ் கூறியிருப்பது, 2026 தேர்தல் களம் பல திருப்பங்களைக் கொண்டது என்பதை உணர்த்துகிறது. திமுக கூட்டணி அமையாத பட்சத்தில் ராமதாஸ் அணி விஜய் ஆரம்பித்துள்ள தவெக பக்கம் செல்ல இறுதி வாய்ப்பாக வைத்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Advertisements




