Tn Rains:வங்கக் கடலில் உருவானது புதிய புயல்..!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்தது.

அந்த நேரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை கிடைத்தது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வரும்போது மேலும் மழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது பொய்த்து போனது.

இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுதினம் (புதன்கிழமை) புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்தப் புயலினால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதே தற்போது வரையிலான தகவலாக இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகும் இந்தப் புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-வங்காள தேசம் இடையே மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *