Advertisements

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்று, முதலமைச்சராகியுள்ளார் ஜோசப் விஜய். அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வாக்கு கேட்பது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
ஆனால், ஆட்சியில் அமர்ந்து 100 நாட்களைக் கடந்தும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கேள்விகள் எழத் தொடங்கின. அந்த வகையில், இன்றைய நிலவரம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் இன்று 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேசியபோது வெளியிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள், அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாகியிருக்கின்றன.
முதலில், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 பேர் பயனடைவார்கள் என்றும், சிலிண்டருக்கான தொகை நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்றும், சிறு, குறு வியாபாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் **பொங்கல் முதல்** இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவெக-வின் தேர்தல் வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல் கட்டமாக 3 சிலிண்டர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு முக்கிய அறிவிப்பு. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது! தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்தத் தெளிவான அறிவிப்பும் வெளியாகாததால், முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறாரா? என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடையே எழுந்தது.
இந்நிலையில், இன்று சட்டசபையில் அதற்கும் பதில் கிடைத்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், பரந்தூர் வேண்டாம் என்றால் புதிய இடம் எது? அந்த புதிய இடம் எந்த மாவட்டத்தில் அமையும்? அதற்காக எவ்வளவு நிலம் தேவைப்படும்? அந்தப் பகுதி மக்களின் நிலை என்ன ஆகும்? என்பது அடுத்த கட்டத்தில் மிகப்பெரிய கேள்வியாக மாறலாம். மூன்றாவதாக, பெண்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பு. இனி டீலக்ஸ், எல்.எஸ்.எஸ். உள்ளிட்ட பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!
தற்போது செயல்பாட்டில் இருக்கும் மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், வரும் அக்டோபர் 2 முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். மாவட்டங்களுக்கு இடையேயான சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருமான உச்சவரம்பும் இல்லை; பயணங்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் திருநங்கை சமூகத்தினர் மத்தியில் வரவேற்பைப் பெறக்கூடிய முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்கள், மறுபுறம் பெண்களுக்கு விரிவுபடுத்தப்படும் இலவசப் பேருந்துப் பயணம், அதே நேரத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி… இந்த மூன்று அறிவிப்புகளும் ஒரே நாளில் வெளியாகியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆனால், இங்கே எழும் முக்கிய கேள்வி ஒன்றுதான் இந்த இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி எங்கிருந்து வரும்?
பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும் நிலையில், தமிழக அரசு இந்தக் கூடுதல் நிதிச்சுமையை எப்படி சமாளிக்கப் போகிறது?
இலவசத் திட்டங்களால் மக்கள் பயன்பெறுவது ஒருபுறம் இருக்கட்டும்… ஏற்கனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி என கூறப்பட்ட நிலையில், இந்தப் புதிய திட்டங்களுக்கான செலவுகள் எதிர்காலத்தில் தமிழகத்தின் நிதிநிலையிலும், மக்களின் மீதும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
மக்களுக்கு கிடைக்கும் இலவசத்தின் பின்னால் இருக்கும் நிதிச்சுமையை யார் சுமப்பது? என்பதே இப்போது எழும் முக்கியமான கேள்வி. ஒருபுறம் மக்கள் நலன்… மறுபுறம் அரசின் நிதிநிலை… இந்த இரண்டிற்கும் இடையில் தமிழக அரசு எப்படிப்பட்ட பாதையைத் தேர்வு செய்யப் போகிறது?
இந்த அறிவிப்புகள் உண்மையான சூப்பர் சிக்ஸ் நலத்திட்டங்களின் தொடக்கமா? அல்லது தமிழக அரசியலில் அடுத்த பெரிய திருப்பத்திற்கான முன்னோட்டமா? அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இனி அவை நடைமுறைக்கு வரும்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலவச சிலிண்டர், இலவசப் பேருந்துப் பயணம், பரந்தூர் திட்டம் கைவிடல் — இந்த மூன்றில் எந்த அறிவிப்பு மக்களுக்கு அதிகப் பயன் தரும்? உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.
Advertisements




