
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை” என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “லாட்டரி மருமகன்” என பதிலடி கொடுத்தார்.
விமான நிலைய விவாதம் போய், சட்டசபையில் மாப்பிள்ளை–மருமகன் பஞ்சாயத்தாக மாறியது! இரு தரப்பும் மாறி மாறி குத்திய இந்த வார்த்தைப் போரின் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்..!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து விவகாரத்தின் போது ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை மற்றும் லாட்டரி மருமகன் என்று தவெக மற்றும் திமுக மோதி கொண்டது. இதில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேச்சிற்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதில் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டசபையில் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக விவாதம் எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக மொத்தம் 5,846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாக தெரிவித்தார்.
அதில், 3,774 ஏக்கர் பட்டா நிலங்களும், 2,681 ஏக்கர் விவசாய நிலங்களும் அடங்கியதாக அவர் கூறினார். இதனால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட இருந்த நிலத்தின் அளவு மற்றும் அதன் தன்மை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.
இதில் 1,972 ஏக்கர் அரசு நிலங்களாகவும், அதில் 1,858 ஏக்கர் நீர்நிலைகளாகவும் இருந்ததாக கூறினார்.
மேலும், திட்டத்திற்காக சுமார் 90% நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என்றும், மொத்தமாக 1,802 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, ஏகனாபுரம், காரை உள்ளிட்ட கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்தார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் 5-வது டெர்மினல் திறக்கப்பட்டால், ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளை கையாளும் திறன் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத்துக்கு இன்னும் சுற்றுச்சூழல் அனுமதியே வரல! அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டம்தான்… ஆனா பெருசா எந்த நகர்வும் நடக்கலன்னு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் சொல்லிட்டாரு.
அதோட நிக்காம, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகத்தான் கதறுறாங்க”**ன்னு ஒரு குண்டையும் தூக்கிப் போட்டாரு! அதுக்கு திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு சும்மா இருப்பாரா? உடனே பதிலடி கொடுத்து, “வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை கொண்டு வருகிறீங்கன்னு நானும் கேட்கிறேன்!”**ன்னு கேட்டு, சட்டசபையையே சூடாக்கிட்டாரு. விமான நிலைய விவாதம் எங்கயோ போய்… மாப்பிள்ளை, மருமகன் கணக்குல மாறி, வார்த்தைப் போராக வெடிச்சிருச்சு!
சென்னையின் புவியியல் அமைப்பை கருத்தில் கொண்டால், வேறு எந்த இடத்திற்கும் விமான நிலையத்தை மாற்றுவது சாத்தியமில்லை என சட்டசபையில் விளக்கம் அளிக்கப்பட்டது. பரந்தூரை தேர்வு செய்வதற்கு முன்பு சோழிங்கநல்லூர், படாளம், பண்ணூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்த இடங்களை விமான நிலைய ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னையின் கிழக்குப் பகுதியில் வங்கக்கடலும், வடக்குப் பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் ஏரிகளும் இருப்பதால், விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்கள் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையிலேயே பரந்தூர் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னையின் நான்கு திசைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்கள் இருப்பதாக சட்டசபையில் விளக்கம் அளிக்கப்பட்டது. தெற்கில் ராணுவப் பகுதிகள், கல்பாக்கம், வேடந்தாங்கல் சரணாலயம், கிழக்கில் வங்கக்கடல், வடக்கில் தொழிற்சாலைகள் மற்றும் ஏரிகள் என பல்வேறு தடைகள் உள்ளதால், விமான நிலையத்திற்கான இடத்தை மேற்கு பகுதியில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பண்ணூர் – பரந்தூர் இடையே ஒப்பீடு செய்து, தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், விமான நிலையமாக இருந்தாலும், சிப்காட் திட்டமாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, எந்த இடத்தில் குறைந்த அளவிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கிட்டு, அனைத்து ஆய்வுகளுக்கும் பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னரே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் புதிய விமான நிலையத்திற்காக நீங்கள் தேர்வு செய்யும் இடங்களிலும் இதேபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் 2-வது ரன்வே அமைக்க எப்படி முடியும்? மீனம்பாக்கத்தில் இருந்து எத்தனை மக்களை அப்புறப்படுத்தப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. பரந்தூரில் சுமார் 2,500 பேருக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டின் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு மாறாக செயல்படுகிறீர்கள் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.




