என் மகனைக் கொல்ல ஈரான் முயற்சி.! நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு..!

Advertisements

இன்றைய உலக அரங்கில் சர்வதேச அரசியல் நாளுக்கு நாள் எப்படி சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றித்தான் இந்தத் தொகுப்பில் பார்க்கப் போகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள், சர்வதேச பொருளாதாரத்தைச் எப்படி உலுக்கி எடுக்கிறது என்பதைப் பற்றிப் பலரும் கவலையுடன் பேசி வருகிறார்கள்.

குறிப்பாக, இஸ்ரேல் – ஈரான் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதும், சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்டிருக்கும் திடீர் தாக்குதலும் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. இது போதாதென்று, ஈரானுடன் வர்த்தகம் செய்த இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடித் தடைகள் எனப் பல அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. வாருங்கள், இந்தச் செய்திகளை விரிவாகப் பார்ப்போம்!

முதலில் நாம் பார்க்கப் போவது மத்திய கிழக்கு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அதிர்ச்சிகர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இஸ்ரேல் மீது தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் ஈரான், தன் மகன்களில் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சி செய்ததாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாகப் பேட்டி அளித்தபோதே அவர் இந்தக் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பேசும்போது, “ஈரான் அரசு எனது மகன்களில் ஒருவரை இலக்கு வைத்துப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி, இஸ்ரேலில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தலைவர் காடி ஐசன்கோட்டிற்கு உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை 24 மணி நேரத் பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

இது எந்த வகையிலும் ஆடம்பரம் கிடையாது; அப்படி பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால், ஈரானின் சதித் திட்டங்கள் எளிதில் வெற்றி பெற்றுவிடும்” என்று எச்சரித்துள்ளார்.நெதன்யாகுவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், ஈரானால் எந்த மகன் குறிவைக்கப்பட்டார், இந்தச் சதி முயற்சி எப்போது நடைபெற்றது என்பது பற்றிய விரிவான விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவி வரும் சூழலில், பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தக் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் , தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கி வரும் வேளையில் , தற்பொழுது செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முன்பே முற்றிலுமாக முடங்கிவிட்டது. இதன் காரணமாக, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாகத்தான், செங்கடலின் பாப் எல் மண்டேப் ஜலசந்தி வழியாக சவுதி அரேபிய நிறுவனங்கள் தங்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால், இந்த ஜலசந்தி அருகே ஈரானின் நட்பு நாடான ஏமன் அமைந்துள்ளது. ஏமனின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே 11 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈரானின் உத்தரவின்படி, செங்கடல் வழியாகச் செல்லும் சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சிப் படை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அந்த நாட்டின் எண்ணெய் கப்பல் நேற்று செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. வழக்கம் போல இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கும் ஹவுத்தி படை இந்த முறை மௌனமாக இருப்பதால், தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து சவுதி அரேபிய கடற்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இறுதியாக, ஈரான் அமைதியாக இருந்தாலும் அமெரிக்கா சும்மா விடாது போல, மறுபடியும் , பொருளாதார ரீதியாக ஈரானை எப்படியாவது முடக்கி விட்டுவிட என்ற நோக்கத்தில் ஈரானிய நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

ஈரான் உடனான மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக மேலும் முடக்கும் முயற்சிகளை அமெரிக்கா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களை குறிவைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி (Porties Partners LLP) என்ற நிறுவனம், ஈரானிய பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உதவியுள்ளது. இதன் பங்குதாரர்களாக இந்தியாவைச் சேர்ந்த இந்த்-ரிஸ்-மியா அஷாராஃப்-மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோர் உள்ளனர்.

சதாசிவ ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனம், பிப்ரவரி 2024 முதல் ஜூன் 2025 வரை சுமார் 69 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

பிபி சாஃப்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இதே காலகட்டத்தில் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

பிரக்ருதீஸ் இன்ஃப்ரா இம்பெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை ஈரானிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது.

ஈரானிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்குவது, சேமிப்பது மற்றும் விற்பது போன்ற நடவடிக்கைகளில் தெரிந்தே ஈடுபட்டதால், இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒருபுறம் அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டுகள், மறுபுறம் கடலில் நடக்கும் ஏவுகணைத் தாக்குதல்கள், அதோடு பொருளாதாரத் தடைகள் என மத்திய கிழக்கு நிலவரங்கள் மிகவும் சிக்கலாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த விவகாரங்கள் வரவிருக்கும் நாட்களில் உலகளாவிய சந்தையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *