
காவிரி நதிநீர் பங்கீடு முறையாகப் பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்குப் பலனில்லை. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர். நெல், கரும்பு குறித்து தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தி.மு.க. ஆட்சியில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடி சேர்க்கப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.குறுவை சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை. நீரின்றி காய்ந்த சம்பா, தாளடி சாகுபடி பயிரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
காவிரி நதிநீர் பங்கீடு முறையாகப் பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


