
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில், எல் கே ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மூன்றரை வயது மாணவி லியா பிரியதர்சினி என்ற குழந்தை எல்கேஜி சி வகுப்பில் பயின்று வந்தார்.
இந்த வகுப்பறையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் தான் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழிவறை அருகேயே செப்டிக் டேங்க் உள்ளது. இந்தச் செப்டிக் டேங்கை சுற்றி வேலை அமைக்கப்பட்டு இருந்தது. செப்டிக் டேங்க் மேலே ஒரு இரும்பு தகரத்தினை கொண்டு மூடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி லியா பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாகக் கழிவு நீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.
அப்போது அந்தத் தொட்டியில் மூடப்பட்டிருந்த இரும்பு தகரம் உடைந்து சிறுமி உள்ளே விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற சிறுமிகள் ஆசிரியர்களிடம் தகவல் கூற உடனடியாக ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாகத் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு வந்து குழந்தை லியா பிரியதர்ஷினியை மீட்டனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளியில் எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.
முன்னதாக பள்ளிக்கும் மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் கழிவுநீர் தொட்டி இருக்கும் இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாகச் செயல்பட்டதே காரணம் என்று பெற்றோர்கள் கூறி வருகிறார்கள்.


