தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க உத்தரவு – கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டம்!

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நொடிக்கு 3500 கன அடி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ள நிலையில், இதைக் கண்டித்துக் கிருஷ்ணராஜ சாகர் அணை முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லியில் நேற்றுக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் நாள்தோறும் நொடிக்கு 3,500 கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. இரு மாநில எல்லையான பிலிக்குண்டு என்னுமிடத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று கருதியும், இதைக் கண்டித்தும் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜசாகர் அணைப் பகுதியில் பாஜகவினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் அங்குக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் மகேஷ், கர்நாடகச் சட்டமேலவைத் தலைவர் சலவாதி நாராயணசாமி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுப்படி எப்படித் தண்ணீர் திறந்துவிட முடியும்? என்றும் அவர்கள் வினவினர்.
கிருஷ்ணராஜசாகர் அணைக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து பாஜகவினர் முழக்கமிட்டனர்.

காவிரிப் பிரச்சனை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் குமரசாமி, காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் சுற்றுப் பயணம் செய்து உண்மை நிலையை அறிந்துகொண்டவின் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *