மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பாலகிருஷ்ணனின் உடற்கூராய்வு அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பாலகிருஷ்ணனின் உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயங்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது கழுத்தின் இடது பக்கத்தில் சாய்வான கயிறு தடம் இருப்பதாகவும், வலது பக்கத்தில் 3 சிராய்ப்பு காயங்களும், ஊசி குத்தியது போன்ற 3 அடையாளங்களும் காணப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, முதுகுப் பகுதியில் நீல நிற ரத்தக்கசிவு காயம், 1,400 கிராம் எடையுடன் கூடுதல் வீக்கமடைந்த நிலையில் மூளை, 358 கிராம் எடையுடன் வீக்கமடைந்த இதயம் மற்றும் இடது முழங்கால், இடது கையில் சிராய்ப்பு காயங்கள் இருந்துள்ளதும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாலகிருஷ்ணனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதற்குத் திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணன் அவர்களின் உடற்கூராய்வில், அவர் தாக்கப்பட்டிருப்பதற்குச் சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்குக் காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை, உள்ளும் பாதுகாப்பில்லை என்ற வகையில் கொடூர ஆட்சி நடந்து வருகிறது” என்று சாடியுள்ளார்.
மேலும், “பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களைக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றும் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

