Tiruppur: கைகலப்பு கத்திக்குத்தில் முடிந்தது!

Advertisements

இன்ஸ்டாகிராமில் பெண்போலப் பேசி நண்பனைத் துன்புறுத்திய விவகாரம் கைகலப்பாகி கடைசியில்  கத்திக்குத்தில் முடிந்தது.

இதில் தொடர்புடைய 18 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை அவிநாசி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்.இவருடைய  மகன் கோபி (24).இவர் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சிவா (24) மற்றும்நான்கு நண்பர்களுடன் அவிநாசியை அடுத்த பழங்கரை அருகே உள்ள கள்ளுமடைகுட்டை பகுதியில் கடந்த புத்தாண்டு தினத்தன்று மது அருந்திப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இவர்களின் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோனியோகராஜ் மகன் ஜெயராம் (22), சௌந்தரராஜன் மகன் பாஸ்கரன் (22) மற்றும் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய மூவரும் அங்கு வந்து அனைவரும் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில், கோபியின் வேறொரு நண்பரான வசந்தகுமார் என்பவருக்கு, அவர்களோடு மது அருந்திக் கொண்டிருந்த 18 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் போலியாகப் பெண் போன்ற முகவரியிலிருந்து பேசித் துன்புறுத்தி வந்தது குறித்து தெரியவந்து.

வசந்தகுமாரும் அவரது மற்றொரு நண்பரான ஜெகதீஸ் என்பவருடன் சேர்ந்து புத்தாண்டிற்கு முந்தய நாள் லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 18 வயது சிறுவன் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு வசந்தகுமார் சிறுவனைக் கண்ணத்தில் அறைந்தது குறித்து 18 வயது சிறுவனும் அவருடன் வந்த ஜெயராம் மற்றும் பாஸ்கரும், கோபி மற்றும் நண்பர்களிடம் கேட்டுள்ளனர்.

அதற்குப் போலி இன்ஸ்டாகிராம் முகவரியில் பெண்போலப் பேசித் துன்புறுத்தினால் அப்படித்தான் அடிப்போம் எனக் கோபி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராம், அதற்குத் தான் உங்களைக் கொல்ல வந்துள்ளோம், எனச் சொல்லிக் கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கோபியின் இடது மார்புக்கு மேல் குத்தியுள்ளார்.

அதே சமயத்தில், பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சிவா – வின் முதுகில் வலது பக்கமும்,18 வயது சிறுவனும் சிவாவின் வலதுபின் தோள்பட்டையிலும் குத்தியுள்ளனர். இதனால், வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சலிட்டதை அடுத்து 18 வயது சிறுவன் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.

காயமடைந்த கோபி மற்றும் சிவா -வை உடனிருந்த அவர்களது நண்பர்கள் உடனடியாகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், 18 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.அவர்களிடமிருந்து கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

போலி இன்ஸ்டாகிராமில் பெண்போலப் பேசி நண்பனைத் துன்புறுத்திய விவகாரம் கைகலப்பாகி கத்திக்குத்தில் முடிந்து மூவர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *