சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தொடர்பான ஆதாரங்கள் சபாநாயகரிடம் திமுக மற்றும் அதிமுகவினர் ஒப்படைத்திருந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு தீர்ப்பை அறிவித்துள்ளார்.
இரு தரப்பினர் வழங்கிய ஆதாரங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆதாரங்களே உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததை போல் எதிர்க்கட்சிகள் பேசி வருகிறார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் பாருங்கள்.
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்த போதும், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. 12 நாட்களுக்குப் பின்னரே பொள்ளாச்சி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அதற்கு மாறாக 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் கூறியது தவறு என்று நீங்கள் ஆதாரம் தந்தால் நீங்கள் கூறும் தண்டனை ஏற்கிறேன்.
அதேபோல் நான் கூறுவது உண்மை என்று ஆதாரம் தந்தால், நான் அளிக்கும் தண்டனையை நீங்கள் ஏற்பீர்களா என்ற சவால் விடுத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சவாலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.
இதன்பின் இன்று காலைச் சபாநாயகர் அப்பாவுவிடம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பும் தங்களின் ஆதாரங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிய வந்தது.
அதில் புகார் பெறப்பட்ட தேதி, வழக்குப்பதிவு செய்யப்பட்ட தேதி தொடர்பான ஆதாரங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதே உண்மை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கிறார். அந்தப் புகார் மனுவைப் பெற்ற பின், டிஎஸ்பி-யை சென்று பாருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
3 நாட்களுக்குப் பின்னரே அவரால் டிஎஸ்பி-யை பார்க்க முடிகிறது. பின்னர் மீண்டும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளார்.
அதன்பின் 24ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கையெழுத்து பெற்று ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் உண்மை. இதுதான் எனது தீர்ப்பாக வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுத்த சவாலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வென்றிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.