திமுக அரசின் மகத்தான கொள்கை மணல் கொள்ளை மட்டுமே – அன்புமணி விமர்சனம்

மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திமுக அரசின் செயல்பாட்டால் நாள்தோறும் பத்து டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை  முதல் நொடிக்கு  ஒன்றே கால் இலட்சம் கன அடிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவைப் பயிர்களுக்குப் போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நீர் நிலைகளும் நிரம்பியிருப்பதால் பாசனத்திற்கான தண்ணீரின் தேவை குறைந்து விட்ட நிலையில், அணையில் இருந்து  நாள்தோறும் திறந்து விடப்படுவதில் பத்து டிஎம்சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாகக் கடலில் கலப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகளை கட்டுவதன் வாயிலாகவும், ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இடையே இணைப்பை

ஏற்படுத்துவதன் வாயிலாகவும்  ஒரே நேரத்தில் 30 டி.எம்.சி வரை தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அக்கறை இல்லாத தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்லாம் தடுப்பணைகளைக் கட்ட வேண்டுமோ அங்கெல்லாம்  மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதும்,  மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதும் மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திமுக அரசின் பரிசு என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *