
சென்னை: தாய்லாந்து நாட்டின் ரக்ஷாசிமா நகரில் நடந்த மாற்றுத்திறன் வீரர்களுக்கான ‘ஐவாஸ்’ சர்வதேச பாரா விளையாட்டுப் போட்டியில், பாட்மின்டன் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் பதக்கங்களைக் குவித்து, நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.
தாய்லாந்து நாட்டின் ரக்ஷாசிமா நகரில், டிச.,1ல் துவங்கி 8ம் தேதி வரை மாற்றுத்திறன் வீரர்களுக்கான ‘ஐவாஸ்’ சர்வதேச பாரா விளையாட்டு போட்டி நடந்தது.
இந்த விளையாட்டு போட்டிகளில், தடகளம், பேட்மின்டன், நீச்சல் என, அனைத்து வகை பாரா விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுகளும் இடம் பெற்றன.
இதில், பாட்மின்டன் பிரிவில், ஏழு தமிழக வீரர்கள் உட்பட இந்தியா சார்பில், 21 வீரர், வீராங்கனையர் பங்கேற்ற நிலையில், தமிழக வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பதக்கங்களை குவித்தனர்.
ஜெகதீஷ் ‘எஸ்.எல். 3’ ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார். தவிர, அதே பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில் வெண்கலம் வென்றார். பிரேம் குமார், தினேஷ் ஜோடி ‘எஸ்.எல். 3’ மற்றும் ‘எஸ்.எல். 4’ இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
தினேஷ், ‘எஸ்.எல். 3’ ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார். கார்த்திக் ‘எஸ்.எல். 3’ மற்றும் ‘எஸ்.எல். 4’ இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார்.
அமுதா, ‘எஸ்.எல். 3’ ஒற்றையர் பிரிவில் வெள்ளியும், அதே பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்றார். ‘எஸ்.எச் 6’ ஒற்றையர் பிரிவில் வெள்ளியும், வெண்கலமும் வென்ற தினகரன், சுதர்சன் ஆகியோர் இணைந்து, அதே பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில் வெள்ளி வென்று அசத்தினர்.

