Thachankurichi Jallikattu: சீறிப்பாயும் காளைகள்.. களைகட்டியது முதல் போட்டி!

Advertisements

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை என்றாலும், ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடங்கும். அங்குள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று கோலகாலமாகத் தொடங்கியது. 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்குப் பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியினை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் இருவரும் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.

மேலும், போட்டியின் முதல் சுற்றிலிருந்து காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தது. காளைகளை அடக்குவதற்கு வீரர்களும் சீறிப்பாய்ந்தனர். பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் அளவிற்கு கோலாலமாகப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஜல்லிக்கட்டுக்காகத் தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளைப் பரிசோதிப்பதற்காகக் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாகக் காயம் அடையும் காளைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்ப்பதற்காகப் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.ஆகையால் பாதுகாப்பு ஏற்பாடு காவல்துறையினர் தீவிரப் படுத்தி உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *