தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். அப்பகுதியில் உள்ள ஜெயபேரி பூங்கா குளத்தில் திடீரென இறங்கினார்.
குளத்தில் இறங்கிய நாகேஷ் எனது மனைவி என்னை அடித்துச் சித்ரவதை செய்கிறாள். அவளிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் எனக் கத்தியபடி இருந்தார்.
நீண்ட நேரம் குளத்தில் கத்தியபடி இருந்த வாலிபரை வெளியே வருமாறு அப்பகுதி மக்கள் கூறினர்.
ஆனால் வாலிபர் குளத்திலிருந்து வெளியே வரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி நாகேஷை வெளியே இழுத்து வந்தனர்.
நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாயென விசாரித்தனர். என் மனைவி என்னைத் தினமும் அடித்துச் சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.
குழந்தைகளிடம் பேசக்கூட அனுமதிப்பதில்லை. அப்பா இறந்து விட்டாரெனக் குழந்தைகளிடம் தவறாகக் கூறுகிறாள். மேலும் அவரது மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களைக் காட்டினார்.
தினமும் என்னை அடிக்கிறார். என்னால் அடி வாங்க முடியவில்லை. விவாகரத்து வாங்கி கொடுங்கள் இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என வேதனையோடு தெரிவித்தார்.
அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். நாகேஷ் கூறிய விசித்திரமான வீடியோவைப் பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
