செப்.5-ன் சுவாரஸ்ய வரலாறு.. இந்திய ஜனாதிபதியான ஆசிரியர்..!

நம்முடைய வாழ்க்கையில் அறிவை மட்டும் கற்றுக்கொடுக்காமல், நம்முடைய எதிர்காலத்தையே உருவாக்கும் முக்கியமானவர்கள்தான் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு, இன்று 65ஆவது ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஏன் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகத் தேர்வு செய்யப்பட்டது?
இதற்குப் பின்னால் ஒரு மகத்தான கல்வியாளரின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது. அவர் யார்? ஆசிரியர் தினம் செப்டம்பர் 5ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்…
1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில் பிறந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். தத்துவஞானி, பேராசிரியர், கல்வியாளர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவம் பயின்றார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரி, மைசூர் பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றினார்.
ஆந்திரப் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். யுனெஸ்கோவில் இந்தியாவின் பிரதிநிதியாகவும் சேவையாற்றினார். சுதந்திரத்திற்குப் பிறகு, 1952ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், 1962ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
மேலும், 1954ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவரானபோது, அவருடைய மாணவர்களும் நண்பர்களும் அவரது பிறந்த நாளை கொண்டாட விரும்பி அவரிடம் அனுமதி கேட்டனர். அப்போது, தனது பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதற்கு பதிலாக, அந்த நாளை ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாகக் கொண்டாடினால் அதுவே தனக்கு பெருமை என்று அவர் கூறியுள்ளார்.
அதன்பிறகு, 1962ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தணி அருகே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், ஆசிரியரானார், தத்துவ ஞானியானார், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரானார், யுனெஸ்கோவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், குடியரசுத் துணைத் தலைவரானார், இறுதியில், இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.
அந்த மகத்தான கல்வியாளர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய ஆசிரியர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மாணவனுக்கு பாடத்தை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை, வாழ்க்கையையே கற்றுக்கொடுக்கிறார்.
நமக்கு அறிவை மட்டும் கொடுக்காமல், வாழ்க்கையையும் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *