
டீக்கடை டேஸ்ட்டில் உருளைக்கிழங்கு போண்டா!
டீக்கடையில் அதிகமாக வடை, பஜ்ஜி தான்போடுவார்கள். அதன் பின் சில கடைகளில் மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் சூடா உருளைக்கிழங்கு போண்டா போடுவார்கள்.! அதற்கென்று தனியாகக் கூட்டம் வரும்.! ஏனென்றால் அதில் சேர்க்கும் பொருட்கள் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும், அதுவும் மாலை நேரத்தில் காரணம் சாப்பிட தோன்றும் நேரத்தில் சூடாக உருளைக்கிழங்கு போண்டா போட்டால் யாரு தான் சாப்பிடாமல் கடையைத் தாண்டுவார்கள் சொல்லுங்க அப்படி என்ன இருக்கு அதையும் வீட்டில் செய்து பாத்திடலாம் வாங்க.!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
சோடாப்பு – 1/4 டீஸ்பூன்
சோம்பு – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
புதினா இலை – சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
ஆயில் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுப் பொரித்து வரும் நிலையில் சோம்பு போடவும்.சோம்பு பொரிந்த பின் பச்சை மிளகாய் சேர்க்கவும், அது கொஞ்சம் பொரிந்த பின் கடைசியில் கறிவேப்பிலையை போடவும். அடுத்து நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். அது நன்றாக வதங்க வேண்டும்.அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1/2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். அதனை ஒரு முறை கலந்து விடவும், பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் அவித்து வைத்த உருளைக்கிழங்கை கைகளால் மசித்து விடவும். அதன் பின் அதில் தேவையான அளவு உப்பு கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து விடவும் இதில் தேவை என்றால் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது கலந்து பின் மசாலா ரெடி ஆகிவிட்டது. அதனை உருண்டை உருண்டையாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை மாவு 1 கப், அதன் பின் அதில் அரிசி மாவு 1/2 கப், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும், இதற்குத் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதிலும் மிச்சம் வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்க்கவும், கடைசியாகக் குக்கிங் சோடா சேர்க்கவும்.பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாகட்டும் அதன் பின் உருட்டிவைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்துக்கொள்ளவும் அடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.!


