திருப்பதியில் ரயில் நிலையம் புதுப்பிப்பதால் தமிழகத்திலிருந்து திருப்பதி செல்லும் இணைப்பில் உள்ள ரயில்கள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பயணிகள் தினந்தோறும் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு உள்ளிட்ட புதுப்பித்தல் பணி நடப்பதால், சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சார்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16203) ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி – சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16204) ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், சில முக்கிய ரயில்களும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.