நியூயார்க் நகரில் உலக வர்த்தக மைய கட்டத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தகர்க்கப்பட்டன. விமானம் கொண்டு மோதி இந்த கட்டடங்கள் தகர்க்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதே நாளில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை அல்குவைதா இயக்கம் செய்தது. இந்த அல்குவைதா இயக்கம் தோன்றியது எப்படி என்று பார்க்கலாம்.
1980ம் ஆண்டு வாக்கில் சவுதி அரேபியாவில் பிறந்த பின்லேடனால் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 1979ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது, சவுதியில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக போரிட்டனர். இவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 1994ம் ஆண்டு அல்குவைதா இயக்கத்தின் தலைவர் பின்லேடனின் சவுதி குடியுரிமை பறிக்கப்பட்டது. பின்னர், சூடானில் தஞ்சமடைந்தவர். அங்கிருந்து , ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்தபடியே, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான வேலைகளை செய்து வந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு அமெரிக்கா சவுதி அரேபியாவை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி , அந்த நாடு மீது ஜிகாத் போர் தொடுப்பதாக பின்லேடன் அறிவித்தார். 1998ம் ஆண்டு கென்யா, தான்சேனியா நாடுகளிலும் அமெரிக்க தூதரகங்களில் அல்குவைதா இயக்கம் குண்டு வைத்தது. இந்த சம்பவத்தில் 224 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக அமெரிக்கர்களையும், இஸ்ரேலியர்களையும் குறி வைத்து அல்குவைதா இயக்கம் கொன்று வந்தது. உச்சக்கட்டமாக 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கின் இரட்டை கோபுரங்கள் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்காக நான்கு விமானங்கள் ஹைஜாக் செய்யப்பட்டன. 19 அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டனர். இவர்களில் 15 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட விமானங்களில் ஒன்று பென்சில்வேனியாவில் தரையில் மோதியது. இரு விமானங்கள் அடுத்தடுத்து, இரட்டை கோபுரங்கள் மீது மோதின. கட்டடடம் தரைமட்டமானது. மற்றொரு விமானம் பென்டகன் மீது மோதியது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.
உலகமே அதிர்ந்து போனது. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து 2011ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை பிடித்து அமெரிக்க ராணுவம் கொன்றழித்தது. பாகிஸ்தானுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் , அந்த நாட்டுக்குள் புகுந்து அமெரிக்க சிறப்புப் படையினர் பின்லேடனை தட்டி தூக்கினர்.
ஆனாலும், அல்குவைதா இயக்கம் முற்றிலும் ஒழிந்துவிட்டதாக கூறி விட முடியாது. சோமாலியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் இந்த இயக்கம் இப்போதும் இயங்கி வருவதாக நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அல்குவைதா இயக்கம் தலை தூக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அல்குவைதா இயக்கத்தில் இருந்த அபுபக்கர் பாக்தாதி, 2014ம் ஆண்டு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்ஐஎஸ் )அமைப்பை சிரியா மற்றும் ஈராக்கில் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது, பின்லேடனை அமெரிக்கா தட்டி தூக்கியது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை தகர்த்து 3 ஆயிரம் பலியாக காரணமாக இருந்த அல்குவைதா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத் என்ற இடத்தில் பெரிய பங்களாவில் வசித்தார். இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை அப்போது அறிவித்தார்.
ஆனாலும், அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகும் அல்குவைதா உலகில் பல அழிவுச் செயல்களை செய்து கொண்டிருந்தது. பாலி தீவில் குண்டு வைத்து ஏராளமானோர் கொல்லப்பட்டனர். மாட்ரிட் நகரில் குண்டு வெடித்து பலர் பலியானார்கள். லண்டன் சுரங்க ரயில் பாதையில் குண்டு வெடித்து 52 பேர் பலியானார்கள்.
இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து 2011ம் ஆண்டு ஒபாமா ஆட்சிக் காலத்தில்தான் பின்லேடனுக்கு முடிவு கட்ட முடிந்தது. பாகிஸ்தானிலுள்ள அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்லேடனை கொல்லும் பொறுப்பு அமெரிக்காவின் சிறப்புப் படையான ‘சீல்’ வசம் ஒப்படைக்கப்பட்டது.
2011ம் ஆண்டு மே1ம் தேதி இரவு 10.51 மணிக்கு ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு கிழக்கு ஆப்காஸ்தானிலுள்ள ஜலலாபாத் விமானப்படைத் தளத்தில் இருந்து நான்கு அமெரிக்க அதிநவீன ஹெலிகாப்டர்கள் வந்தன. இரு ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தான் எல்லையில் நின்றன. மற்ற இரு ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து அபோதாபாத்திலுள்ள பின்லேடன் வீட்டை நோக்கி பறந்தன. நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு ஹெலிகாப்டர் மட்டும் வீட்டின் காம்பவுண்டுக்குள் தரையிறங்கியது.
12.45 மணிக்கு அதில், இருந்த வீரர்கள் தரையிறங்கி குண்டு வைத்து வீட்டின் பிரமாண்ட கதவுகளை தகர்த்தனர். உள்ளே புகுந்ததும் பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி அல்குவைதி ஏ.கே 47 துப்பாக்கிக் கொண்டு அமெரிக்க வீரர்களை சுட்டார். அமெரிக்கப் படையினர் அல்குவைதி மற்றும் அவரது மனைவியை முதலில் சுட்டுக் கொன்றனர்.
அடுத்து, பின்லேடனின் மகன் காலித் ஏ.கே.47 துப்பாக்கியுடன் அமெரிக்க வீரர்களை எதிர்கொண்டார். அவரும் கொல்லப்பட்டார். மூன்றாவது தளத்தில் பின்லேடன் பதுங்கியிருந்தார். இரு அமெரிக்க வீரர்கள் அந்த தளத்தை நோக்கி சென்றனர். உள்ளே தனது மூன்றாவது மனைவியுடன் பின்லேடன் பதுங்கியிருந்துள்ளார். அவரை நோக்கி மூன்று முறை சுடப்பட்டுள்ளது. பின்லேடன் மனைவியுடன் சம்பவ இடத்திலயே பலியானார். பின்னர், நள்ளிரவு 1.03 மணிக்கு பின்லேடனின் உடலை ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் இருந்து புறப்பட்டு விட்டனர். சரியாக 18 நிமிடங்களுக்குள் பின்லேடனின் கதையை அமெரிக்கா முடித்து விட்டது.


