
நீர்வாழ் உயிரினங்களில் விசித்திரமான ஒரு உயிரினம் தான் இந்த நீர்க்கரடி டார்டிகிரேட். கடலின் அடியிலும், பனி உறைந்து கிடக்கும் இடங்களிலும் வாழ்கின்ற ஒரு மிக மிகச் சிறிய உயிரினம் டார்டிகிரேட். நிலத்தில் வாழும் உயிரினங்களைக் காட்டிலும் நீரில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை தான் அதிகம். நீர் யானை, நீர்க் கோழி, நீர்க் குதிரை, நீர்ப் பறவையென எண்ணிலடங்கா நீர் வாழ்விலங்குகள் உயிர் வாழ்கின்றன.
அதிலும் முற்றிலும் மாறுபட்ட, விசித்திரமான விலங்கு தான் இந்த டார்டிகிரேட். காட்டுபகுதியில் வாழும் கரடிபோல் தோற்றமளிக்கும் இது, பார்ப்பதற்கு மாறுபட்ட தோற்றத்துடன் இருக்கும். வெறும் கண்ணால் பார்க்க இயலாது. நுண்ணோக்கி உதவியுடன் தான் பார்க்க முடியும், ஏனெனில் அவ்வளவு சிறியது.

உணவும், நீரும் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியம். கடவுள் கொடுத்த வரமாக இந்த டார்டிகிரேட் உணவும், நீருமின்றி 30 வருடங்கள்வரை உயிர் வாழும் சிறப்புத் தன்மை கொண்டது. மிக மெதுவாக நடக்கும் நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு ஆகும். இவை அரை மில்லி மீட்டர் அளவுவரை இருக்கும், விதி விலக்காகச் சில நீர்க்கரடிகள் ஒன்றரை மில்லி மீட்டர்வரை வளரும். இவ்வினத்தை ஜெர்மனி விலங்கியல் நிபுணர் ஜோஹன் ஆகஸ்ட் எப்பிராயீம் சீயோசி என்பவரால் 1773 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. டார்டிகிரேட் உறைந்து போன குளிரிலும் இனப்பருக்கம் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளது.
இவற்றுக்கு 8 கால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு டார்டிகிரேட் கால்களிலும் நான்கு முதல் எட்டு நகங்கள்வரை இருக்கும். இந்தக் கால்களைக் கொண்டு டார்டிகிரேட் நடந்து வரும் காட்சி கரடி நடப்பது போலவே இருக்கும். இதனால் இவை இப்பெயர் பெற்றன. பாசிகள்மீதும், சிறு சிறு நுண்ணுயிரிகள்மீதும் தன் உடம்பிலிருந்து சுரக்கும் திரவத்தைப் பரப்பி அதனை உணவாக்கிக் கொள்கிறன. நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போது தான் இவை மரணமடைகின்றன.

டார்டிகிரேட் 150 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வாழ்கிறது. மேலும் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வாழக்கூடியதாக இது உள்ளது. மனிதர்கள் பத்து அலகு அணுக் கதிரிவீச்சலேயே மரணம் அடைவார்கள். ஆனால், இது 5,000 அலகு கதிரியக்கத்தையும் தாங்கக்கூடியதாக உள்ளது. டார்டிகிரேட் வெயில், மழை, பனி, புயல், தகிக்கும் எரிமலைகள், பனிபடர்ந்த மலைகள், ஆழ்கடல்கள், காற்றே இல்லா வான்வெளியென எல்லா இடங்களிலும் வாழும் தகவமைப்பை பெற்று, உலகம் முழுவதும் இந்த நீர்க்கரடிகள் காணப்படுகின்றன.
இமயமலையில் 6,000 மீட்டர் உயரத்தில் பனி உறைந்த பிரதேசத்திலும், ஆழ்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன. ஆராய்ச்சிக்காகச் சில டார்டிகிரேட்கள் வான் வெளியில் ஆய்வாளர்கள் வைத்து, பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு எடுத்து வந்தபோது ஒரு நீர்க்கரடி கூடச் சாகவில்லை. இதனால் இதற்கு ‘வான் கரடி’ என்ற பெயரும் வந்தது.

டார்டிகிரேட் ஒரு வினோத உயிரினம், டார்புகிடோ உயிரினத்தைச் சேர்ந்தது. இதனுடைய சதை மிகச் சரியான இயக்கத்தன்மை பெற்றுள்ளதால் பெரிய விலங்கினங்களைப் போன்றே நரும். குளிர்ச்சி என்று இல்லாமல் அதிக கொதி நிலையில் கூட வாழும் மனிதனை காட்டிலும் 1000 மடங்கு கதிரியக்கத்தைக் கூடத் தாங்கும். மேலும் காற்றோட்டமே இல்லாத வெற்றிடத்திலும் டார்டிகிரேட் உயிர் வாழும். அரிய வகை உயிரினம்பற்றிக் கண்டோம். இன்னும் காண்போம்…


