
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைப் பொழிவு வருகின்ற 13ம் தேதிவரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, ஈரோடு, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழையும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவாரூர், நெல்லை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாகத் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 10ம் தேதி கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள நிலையில், அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று முதல் வருகின்ற 11ம் தேதிவரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். காற்று பலமாக வீசும் என்பதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

