
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் முன்னிலை வகித்துவந்த காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா முன்னாள் முதல்வ்ர பூபீந்திரா ஹூடா பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜக முன்னிலை: வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் காலை 10 மணிக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளின் போக்கு மாறியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. 46-ஐ கடந்து முன்னிலை பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். இதனால் தற்போது பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் ஆரம்ப கட்டத்தில் முன்னிலை வகித்தாலும் தற்போது பாஜகவுக்கு சாதகமாக முடிவுகள் செல்வது ஆம் ஆத்மி, ஜேஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸுக்கான வாக்குகளைப் பிரித்ததால் ஏற்பட்டிருக்கலாமென நிபுணர்கள் கருதுகின்றனர்.


