பிரதமரால் பிரபலமான பெண் கமாண்டருக்கு ஜனாதிபதி மாளிகையில் திருமணம்!

Advertisements

புதுடெல்லி:

பிரதமர் மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கும் புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இது தொடர்பாக முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த பெண் அதிகாரி பூனம் குப்தா என்று விளக்கம் அளித்தன.

இவர் பிரதமருக்கான பாதுகாப்பு படையில் இல்லை. ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இருக்கிறார் என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

அப்போது முதல் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர் பூனம் குப்தா நாடு முழுவதும் பிரபலமாக உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் சிவபுரியை சேர்ந்த அவருக்கும் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். துணை கமாண்டராகப் பணியாற்றும் அவினாஷ் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பூனம் குப்தாவின் திருமணம்குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையின் அன்னை தெரசா வளாகத்தில் திருமணத்தை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வருகிற 12-ந்தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.

முதல்முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து பூனம் குப்தாவின் நெருங்கிய உறவினர் சோனு என்பவர் கூறியது,

மத்திய பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியின் அலுவலக மேலாளராக ரகுவீர் குப்தா பணியாற்றுகிறார்.

இவரது மூத்த மகள் பூனம் குப்தா.

கடந்த 2018-ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி. சி.ஏ.பி.எப். தேர்வை எழுதிய பூனம் சி.ஆர்.பி.எப். படையில் துணை கமாண்டராகப் பணியில் சேர்ந்தார்.

தற்போது அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார்.

அவரது நன்னடத்தையால் கவரப்பட்ட ஜனாதிபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பூனமின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தத் திருமண விழா ஜனாதிபதி முர்மு தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *