
Tamil Nadu Secretariat | M.K.Stalin | Logo | Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau
மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவைத் திறந்து வைத்து அதற்கான இலச்சினை வெளியிட்டார்…
சென்னை : தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவைத் திறந்து வைத்து அதற்கான இலச்சினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை திறந்து வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார்.
திட்டமிட்ட வனம் மற்றும் வன உயிரின குற்றங்களைத் தடுக்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவு, வன உயிரினக் குற்றங்கள்குறித்த தகவல் மற்றும் நுண்ணறிவு விபரங்களைச் சேகரம் செய்தல், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரின பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படுகிறது.
இப்பிரிவின் வாயிலாக 190-க்கும் அதிகமான வன உயிரினக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யானை தந்தங்கள் மற்றும் யானைத் தந்தத்திலான பொருட்களை விற்பனை செய்தல், புலித்தோல் மற்றும் அதன் பாகங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாகப் பாம்புகள், கிளிகள், கடல் சங்குகள், கடல் அட்டைகள் ஆகியவை வைத்திருந்த குற்றங்கள் என 50-க்கும் மேற்பட்ட வனக்குற்றங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வன உயிரினப் பொருட்கள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tamil Nadu Secretariat | M.K.Stalin | Logo | Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இ.ஆ.ப, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் மற்றும் முதன்மை வனஉயிரினக் காப்பாளர் திரு ஸ்ரீனிவாச ஆர் ரெட்டி இ.வ.ப, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றக்கட்டுப்பாடு பிரிவு) திரு.ஆகாஷ் தீப் பருவா, இ.வ.ப., (புலிகள் திட்டம்), வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் திருமதி.இரா.காஞ்சனா இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


