
Tamil Nadu International Kite Festival 2023 | Kanyakumari
கன்னியாகுமரியில் நடைபெற்ற காற்றாடி திருவிழாவில் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்கவிடப்பட்டது…
கன்னியாகுமரி : குமரி மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுற்றுலா துறையும் இணைந்து சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரியில் முதல் முறையாகக் காற்றாடி திருவிழாவை நடத்தின. சூரிய அஸ்தமன காட்சி முனையப் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்தக் காற்றாடி திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த காற்றாடி இயக்குவர்கள் பல வண்ண காற்றாடிகளை பறக்க விட்டனர். முதலில் வாழ்க தமிழ் என்ற வாசகத்துடனான காற்றாடி பறக்க விடப்பட்டது.
அதன்பிறகு நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்பட்டு வானத்தில் வர்ணஜாலங்கள் காட்டின. புலி உருவங்களுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, சோட்டா பீம், டோலு-போலு, சுட்கி, பாலகணேசா, யானை, அசோக சக்கர வடிவிலான காற்றாடியெனப் பலவித காற்றாடிகள் விண்ணில் பறக்க விடப்பட்டன. இதனைச் சுற்றுலா பயணிகளும் மாணவ-மாணவிகளும் கண்டு ரசித்தனர்.
3 நாட்கள் நடத்தப்படும் காற்றாடி திருவிழா, இன்றும், நாளையும் சங்குத்துறை கடற்கரையில் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் இரவு 7 மணிவரை நடக்கிறது. தொடக்க விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டம் பறக்கவிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் சர்வதேச அளவில் காற்றாடி திருவிழா 3 நாட்கள் நடக்கிறது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரி மேம்படுத்தப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் ஆன கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது என்றார்.

