
விருதுநகர்: சென்னை மாகாணம் என்றிருந்த தமிழகத்துக்கு “தமிழ்நாடு” எனும் பெயர் சூட்டக் கோரியும், தமிழை ஆட்சி மொழியாக்கக் கோரியும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரை போற்றும் வகையில், விருதுநகரில் உள்ள அவரது மண்டபத்தில் அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழுக்காக உயர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் ரூ.1.6 கோடியில் தியாகி சங்கரலிங்கனாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தைத் திறந்துவைத்தார்.
“தமிழ்நாடு” தினத்தையொட்டி விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், தியாகி சங்கரலிங்கனாரை போற்றும் வகையில் இன்று அவரது உருவச் சிலைக்கு வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, சுமார் ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பேரணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். கல்லூரி சாலை, அல்லம்பட்டி முக்குரோடு, அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாக எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவரை பேரணி நடைபெற்றது.
பின்னர், தேசபந்து திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்துவைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “விருதுநகருக்கு பெருமை சேர்த்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
தமிழ்நாடு எனும் பெயர் பெற்றுத்தர 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். அவரது புகழைப் போற்றும் விதமாக தமிழக முதல்வர், தமிழ்நாடு தினத்தை சிறப்பாகக் கொண்டாட உத்தரவு பிறப்பித்ததால் நாம் அனைவரும் தமிழ்நாடு தினத்தை பெருமையாகக் கொண்டிக்கொண்டிருக்கிறோம்” என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டர்.

