புதிய UGC வரைவு விதியை வாபஸ் வாங்குங்க கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

Advertisements

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான யுஜிசி வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம்மூலம் வலியுறுத்தினார்.

இதைதொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள்குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாநிலங்களும் இதே போன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் எனத் தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும், இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என அம்மாநில முதலமைச்சர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *