
தமிழக அரசியலில் சசிகலாவால் பிளவு, டிடிவி தினகரனால் பிளவு, ஓ பன்னீர்செல்வத்தால் பிளவு என்று அடுத்தடுத்து பிளவுகளை சந்தித்த அதிமுக, வலிமையாகவே இருந்தது. ஆனால் விஜய் என்ட்ரி மற்றும் அவரது அரசியல் வெற்றியால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தவெகவிற்கு வேலுமணி தரப்பில் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
22 பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். அதிமுகவின் இத்தனை குழப்பம் இருக்கிறது. இவ்வளவு பெரிய பிளவை அதிமுக சந்திக்கும் நிலையில், அதுபற்றி வாயை திறக்கவில்லை. தவெகவிற்கு ஆதரவு அளித்தது குறித்தும் வாய் திறக்கவில்லை.. இதன் மூலம் அதிமுகவில் ஏற்படும் பிளவுகளை பாஜக ரசிப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா காலத்தில் மக்களின் பேராதரவைப் பெற்று வந்த அ.தி.மு.க, இன்று தனது அரசியல் வரலாற்றின் மிகக் கடுமையான சவாலைக் சந்தித்து வருகிறது. 2026 தேர்தல் முடிவுகள், கட்சிக்கு ஏற்பட்ட ஒரு சாதாரண தோல்வியாக இல்லாமல், அதன் அடித்தளத்தையே குலைக்கும் நிலைகுலைய செய்துள்ளது.
ஒருகாலத்தில் தி.மு.க-வுக்கு நேரடியான மாற்றாகத் திகழ்ந்த அ.தி.மு.க, தற்போது உள்கட்சிப் பிளவுகள், தலைமைப் போட்டி, கூட்டணி அரசியலில் ஏற்பட்ட தவறான கணக்கீடுகள் மற்றும் தொண்டர் மட்டத்தில் ஏற்பட்ட மனச்சோர்வு ஆகிய காரணங்களால் கடுமையான பலவீனத்தை எதிர்கொண்டிருக்கறது.தற்போது அ.தி.மு.க-வுக்குள் உருவாகியுள்ள மோதல், சாதாரண அதிகாரப் போட்டியாக மட்டும் பார்க்க முடியாது.
எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கிடையேயான கருத்து வேறுபாடு, கட்சியின் எதிர்காலத் தலைமையையும் அரசியல் திசையையும் தீர்மானிக்கும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது. அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டினால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பதவிக்கே ஆபத்து ஏற்படும் அளவிற்கு அதிமுகவில் ஒரு பிரிவினர் அவருக்கு எதிராக மாறி உள்ளனர்.
ஏனெனில் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைச் சுற்றியுள்ள விவகாரத்தில், வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏ-க்களும், எடப்பாடி தரப்புக்கு 22 எம்.எல்.ஏ-க்களும் ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுவது, எடப்பாடியின் ‘ஒற்றைத் தலைமை’ என்ற அரசியல் உருவகத்திற்கு பெரிய பின்னடைவாக வந்துள்ளது. இதுவரை கட்சியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கருதப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, இது ஒரு அரசியல் எச்சரிக்கை மணியாகும்.
2026 தேர்தலுக்கு முன்பே த.வெ.க. தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை அ.தி.மு.க தவறவிட்டது, தற்போது வேலுமணி, சிவி சண்மும் தரப்பு வைக்கும் விமர்சனமாக உள்ளது. இது அதிமுக உள்கட்சிக்குள் மிகப்பெரிய அரசியல் தவறாக விமர்சிக்கப்படுகிறது. இன்று வேலுமணி ஆதரவு அணியினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தது, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அரசியல் நிலைப்பாட்டையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதன் மூலம், கட்சிக்குள் ஒரே அரசியல் கோடு இல்லை என்பதும் வெளிப்படையாகியுள்ளது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது, எடப்பாடி பழனிசாமியை கட்சிக்குள் தனிமைப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. “தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று தலைமை மாற்றம் தேவை” என்ற இவர்களின் கருத்து, இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது.
அதில் குறிப்பாக, “விஜயின் அரசியல் தாக்கத்தை எடப்பாடி பழனிசாமி சரியாக மதிப்பிடவில்லை; அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணம்” என்ற சி.வி. சண்முகம் வைத்த விமர்சனம் தான் அதிமுகவிற்கு அதிகம் பேசப்படுகிறது. அ.தி.மு.க-வின் தோல்வி என்பது வெறும் தேர்தல் கணக்கீட்டுத் தவறல்ல; புதிய தலைமுறையின் அரசியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ளத் தவறிய தலைமைக்கான விளைவு என்ற பார்வையும் வலுப்பெற்றுள்ளது.
அ.தி.மு.க உள்கட்சிப் பிரச்சனைகளால் சிதறிக்கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க வெளிப்படையான தலையீடு எதையும் செய்யாமல் அமைதியாக இருப்பது அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த மௌனம் சாதாரண அரசியல் மரியாதையா? அல்லது திட்டமிட்ட நீண்டகால அரசியல் வியூகமா? என்ற கேள்வியும் அரசியல் நிபணர்களால் எழுப்பப்டுகிறது.
ஏற்கனவே அதிமுகவில் சசிகலாவால் பிளவு, டிடிவி தினகரனால் பிளவு, ஓ பன்னீர்செல்வத்தால் பிளவு என்று அடுத்தடுத்து பிளவுகளை சந்தித்தது. இப்போது வேலுமணி தரப்பில் பெரும்பாலான நிர்வாகிகள் பிரிந்து நிற்கிறார்கள்.அ.தி.மு.க இப்படி சல்லி சல்லியாக உடையும் போது, அதன் பாரம்பரியமான தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் சிதறும் சூழல் உருவாகிறது.
அந்த வாக்குகளை தன்னுடைய அரசியல் அடித்தளமாக மாற்றிக் கொள்ள பா.ஜ.க முயற்சிக்கிறது என்ற கருத்து வலுப்பெறுகிறது. அதாவது, அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, அது பலவீனமடைந்த பிறகு அதன் அரசியல் இடத்தைத் தானே நிரப்ப வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் நீண்டகால நோக்கமாக இருக்கலாம் என திமுக, அதிமுக அதரவு அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், அ.தி.மு.க போன்ற வலுவான திராவிடக் கட்சி பலவீனமடைய வேண்டியது அவசியம் என்பதை பா.ஜ.க புரிந்துகொண்டுள்ளது. அதனால், அ.தி.மு.க-வின் வீழ்ச்சி என்பது பா.ஜ.க-வுக்கு ஒரு அரசியல் வாய்ப்பாக மாறுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க-வுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகப் பேசிய தருணங்கள் இருந்தன. தற்போது அவர் அரசியல் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், பா.ஜ.க எந்தவித ஆதரவும் அளிக்காமல் அமைதியாக இருப்பது, அவருக்கான மறைமுக அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பல பிரிவுகளாக ஏற்கனவே சிதறியிருந்த அ.தி.மு.க, தற்போது வேலுமணி அணியின் எழுச்சியால் மேலும் பலவீனமடைந்துள்ளது. இந்த சூழலில், கட்சி மீண்டும் ஒன்றுபட்டு எழுமா அல்லது பல சிறு அணிகளாகப் பிளந்து தனது அரசியல் அடையாளத்தை இழக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஒருகாலத்தில் தமிழக அரசியலின் முக்கிய அச்சாக இருந்த அ.தி.மு.க, இன்று தனது இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் குழப்பத்தை வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க, அ.தி.மு.க-வின் வீழ்ச்சியால் உருவாகும் அரசியல் வெற்றிடத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.
2026-க்கு பிந்தைய தமிழக அரசியல், அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதோடு மட்டுமல்லாமல், புதிய அரசியல் சக்திகள் உருவாகும் வாய்ப்புகளையும் திறந்துவிட்டுள்ளது. இனி நடைபெறும் அரசியல் நகர்வுகள், தமிழகத்தில் திராவிட அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய திருப்பமாக அமையலாம்..


