
திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளமாட்டோம் எனத் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அறிவிப்பு.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில, பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பாராளுமன்ற தேர்தலில் போது மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள்குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தெரிவிக்கும்போது, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை திமுகவுடன் நடைபெறவில்லை எனவும், அப்படி நடைபெறும் பட்சத்தில் தாங்கள் ஒரு பாராளுமன்ற தொகுதியைக் கேட்டுப் பெறுவோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெயர் ஆங்கில எழுத்துக்களில் டி.வி.கே என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும் டி.வி.கேயென ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாகத் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவ வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாகக் கருத்துக்களை கேட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதி கூடப் பெற முடியாது எனவும், முன்பு போல் இல்லாமல் தற்போது பாஜக கிராமப்புறங்களில் நல்லதொரு வளர்ச்சியைப் பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தாங்கள் கூட்டணியில் இருந்தாலும், இந்தியா கூட்டணியில் தாங்கள் இல்லை எனவும் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், கேரளாவிற்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வது தொடர்பாகக் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முன்வருவதில்லை எனவும், நமது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் தனது வளங்கள் வீணாகிக் கொண்டுள்ளன எனவும், காவேரி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ரீதியாக உரிய அழுத்தங்களைக் கொடுத்தும் நீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்டவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



