
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் அவருடைய மனைவி ராப்ரி தேவி முதல்வர் ஆனார். அதே வழியில் தற்போது டெல்லியில் முதல்வர் பதவியை ஏற்க கெஜ்ரிவால் மனைவி சுனிதா தயாராகி வருவதாகப் பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது இந்தத் தகவலை வெளியிட்டார். பேட்டியின்போது அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த தெளிவு வந்து எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, “ஒன்பது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் கேஜ்ரிவால் பதிலளிக்கவில்லை. அதன்பின்னரே அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வீடு தேடிச் சென்றனர். அதை விடுங்கள். தற்போது கெஜ்ரிவாலுக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளது.
இப்போது நீங்கள் சொல்லும் மேடம் (கெஜ்ரிவால் மனைவி சுனிதா) தலைமை பதவிக்குத் தயாராகி வருகிறார். கெஜ்ரிவாலும், அவரது மனைவியும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்கள். பீகாரில் ராப்ரி தேவி செய்தது போல் தனது கணவரின் பதவியை வகிக்கக் கேஜ்ரிவால் மனைவி சுனிதா தயாராகி வருகிறார்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “கெஜ்ரிவால் தொடக்கத்தில் இருந்தே மற்றவர்கள் சொல்வது பொய் என்று குறை கூறி வந்தார். டெல்லியில் காற்று மாசு சூழ்ந்தபோது அதற்குப் பஞ்சாப்பை குறை கூறினார். ஆனால் அங்கும் அவருடைய கட்சி ஆட்சி ஏற்பட்ட பிறகு டெல்லியில் நிலைமை மேலும் மோசம் அடைந்தது” என்றும் குற்றம் சாட்டினார்.
கைது செய்யப்பட்டிருப்பதால் டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சிறையில் இருந்தவாறே ஆட்சி நடத்தி வருகிறார் கெஜ்ரிவால். அவர் விரைவில் பதவி விலகுவார் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டு வரும் நிலையில்தான் அவரது மனைவி முதல்வர் பதவியை ஏற்கலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் கூறிவருவது அவரின் மனைவி சுனிதாவே. முன்னதாக, கேஜ்ரிவாலுக்காக அவரது மனைவி சுனிதா ‘கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்’ என்ற வாட்ஸ் அப்பிரச்சாரத்தை அறிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்கள் வாழ்த்துகள் அனுப்ப வாட்ஸ் அப் எண் ஒன்றையும் அவர் அறிவித்துள்ளார்.


