
கொழும்பு: கச்சத்தீவு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கச்சத்தீவை திருப்பித் தரும்படி இதுவரை இந்தியாவில் இருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும் இலங்கையின் மூத்த அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராமேஸ்வரம் அருகில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த விவகாரத்தை பா ஜனதாவும் பிரதமர் மோடியும் எழுப்பி உள்ளனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
தாங்கள் ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலத்தில் அதைப் பற்றி கவலைப்படாத பாஜக இப்போது தேர்தல் சமயத்தில்அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இந்த பிரச்சினையை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கிடையில்கச்சத்தீவை மீட்கும் பணிகளை இந்திய அரசு தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறி இருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அழைத்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை.
அப்படி கடித தொடர்பு இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அடித்து இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்ரீலங்கா தொடர்பான வெளியுறவு கொள்கை இயற்கையானது, ஆரோக்கியமானது”.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டதாக” குற்றம் சாட்டி இருந்தார்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெய்சங்கர் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதா என்று கேட்டதற்கு இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பதில் அளிக்க முடியாது என்று கூறிஅந்த கேள்வியை தவிர்த்து விட்டார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.




