நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தனது எக்ஸ் தள பக்கத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில், அவரது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தை பிளாக் செயின் நிறுவனம் ஒன்று ஹேக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. சமீப நாட்களாக பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு முதலீட்டு இணையதளங்கள் மூலமாக மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி, பாடகி ஸ்ரேயா கோஷல், சுதா மூர்த்தி, சத் குரு போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள், காணொலிகளை பயன்படுத்தி, அவர்கள் குறிப்பிட்ட சில வர்த்தக தளங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பது போன்று பதிவுகளை வெளியிட்டு அந்த பதிவை கிளிக் செய்யும்போது, அது போலியான வலைதளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு, அதன்மூலம் போலியான மோசடி முதலீடுகள் நடைபெறுவதை சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
எனவே, சந்தேகத்துக்குரிய இணைப்புகள் அல்லது லிங்குகளை கிளிக் செய்வதை சமூக ஊடக பயனர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டோ புகார் அளிக்கலாம் என்றும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

