
டில்லி, குஜராத், ஹரியானா, கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆம்ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதேநேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. அதில் இடம்பெற்ற திரிணமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியும் தனித்து நிற்பதாக அறிவித்தன. இதற்கிடையே உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் 17, சமாஜ்வாதி கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தன.
இந்த நிலையில் டில்லியில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம்ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஆம்ஆத்மியின் அதிஷி, சவுரப் பரத்வாஜ், காங்கிரசின் முகுல் வாஷ்னிக் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது வெளியிட்டனர்.
கூட்டணிகுறித்து அவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
டில்லியில் மொத்தமுள்ள 7 லோக்சபா தொகுதிகளில் ஆம்ஆத்மி 4, காங்கிரஸ் 3ல் போட்டி.
புதுடில்லி, மேற்கு டில்லி, கிழக்கு டில்லி, தெற்கு டில்லி ஆகிய 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டி.
சந்த்னி சவுக், வடகிழக்கு டில்லி, வடமேற்கு டில்லி ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி.
குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளில் பருச் மற்றும் பாவ்நகர் ஆகிய இரு தொகுதிகளில் ஆம்ஆத்மியும், மீதமுள்ள 24 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.
ஹரியானாவில் 9 தொகுதிகள் காங்கிரசுக்கும், குருஷேத்ரா தொகுதி மட்டும் ஆம்ஆத்மி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவாவில் உள்ள இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி.
நீண்ட இழுப்பறிக்கு பின்னர் சண்டிகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடிவு.
பஞ்சாபில் ஆம்ஆத்மி – காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை; தனித்தனியாகப் போட்டி.



