Stormy Daniels: ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? – முழு விவரம்!

Advertisements

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது.

அண்மையில் டிரம்ப் இரண்டு தனித்தனி நியூயார்க் சிவில் வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளை எதிர்கொண்டார். ஆனால் அவர்மீதான குற்றவியல் விசாரணைகள் சற்று வித்தியாசமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.

இவ்வழக்கில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் `கிரிமினல்’ ரகம் அல்ல என்று வாதிட்ட அவர், தான் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

எட்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் இவ்வழக்கின் விசாரணை, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பின் பரப்புரையில் விளைவுகளை ஏற்படுத்தும். பரப்புரையில் ஈடுபடுவதிலிருந்து அவர் அடிக்கடி விலகியிருக்க நேரிடும்.

கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட டிரம்ப் உடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம்பற்றி வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.

டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ எனப் பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.

டிரம்புடனான தொடர்புகுறித்து மௌனமாக இருப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) செலுத்துமாறு தனக்கு டிரம்ப் உத்தரவிட்டதாகக் கோஹென் கூறுகிறார். சட்டச் செலவுகள் என்று பதிவு செய்து அந்தப் பணத்தை தனக்கு ட்ரம்ப் கொடுத்ததாகவும் கோஹென் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை 2016 தேர்தலில் “சட்டவிரோதமாகச் செல்வாக்கு செலுத்தும்” முயற்சி என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.

வெளியே பேசாமல் இருப்பதற்கான பணம் (Hush Money) செலுத்துவது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், டிரம்ப் ஆபாச நடிகைக்கு அளித்த பணத்தை, ‘சட்டச் செலவுகள்’ என்று குறிப்பிட்டு கோஹனுக்குச் செலுத்தியது தவறு என்று குற்றம்சாட்டுகிறது.

மொத்தத்தில், பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *