Trichy Siva : கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்..!

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார் என்றும், குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன்போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலிவுற்ற நிலையிலும் தனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது தன் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *