
தமிழ் சினிமாவில் சாந்தமான முகம் மற்றும் மென்மையான குரல் , திறமையான நடிப்பின் மூலம் அணைவரையும் கவர்ந்தவர் தான் ஸ்ரீ. இவர் தமிழில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். 2012 இல் வெளியான வழக்கு எண் 18இன் கீழ் 9 படத்தை 90ஸ் கிட்ஸ் மறந்திருக்கமாட்டார்கள். 2023இல் இறுகப்பற்று திரைப்படம் 2கே கிட்ஸின் நினைவுகளில் இருந்து விலகியிருக்கிறது. இதுமட்டுமின்றி, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஷ் கனகராஜின் மாநகரம், வில் அம்பு என பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் ஸ்ரீ.
இவரின் பரிதாபத்திற்குரிய நிலைதான், இணையதளத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.ஸ்ரீ-யின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள், இவர் ஸ்ரீ-தானா? என யோசிக்கும் விதத்தில், எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு உடல் மொலிந்து காணப்படுகிறார். தலையில் நீண்ட வெள்ளை முடியுடன் பார்க்கவே மிகவும் வித்தியாசமாக உள்ளார். தான் சமைக்கும் உணவுகளை, காலை, மதியம், இரவு என தேதியுடன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதை கண்ட நெட்டிசன்கள், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் வெற்றிக்குப்பின், ஸ்ரீக்கு சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.அதே ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சில நாட்களிலேயே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டார்.. இறுதியாக நடித்த இறுகப்பற்று திரைப்படத்திலும் கவனிக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடித்த படங்களில், ஏற்ற கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தன் நடிப்பால் சிறப்பு சேர்த்து, பாராட்டுகளைப் பெற்றவர். அவருக்கு இப்படி ஒரு நிலையா என பெரும்பாலானோர் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர். ஸ்ரீ-யின் நிலை குறித்து அறியும் நண்பர்களோ, உறவினர்களோ அவருக்கு உதவிட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
