
சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்திலிருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணிவரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணிவரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டிலிருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணிவரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்குப் புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாகக் கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.


