Sonia Gandhi: ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வந்தார்!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டித் திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. சென்னை நந்தனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவது உள்ளிட்ட பெண் உரிமை கருத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் வந்துள்ள சோனியா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். சோனியா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் சென்னை வந்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இருவரும் சென்னை வந்துள்ளதால், தமிழக அரசியல் சூழல், தொகுதி எதிர்பார்ப்புகுறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *