ரேஷன் அரிசி கடத்தலால் – அன்புமணி!

Advertisements

சென்னை: 

தமிழகத்தில் நியாய விலைக்கடை அரிசி கடத்தலால் 2022-23ம் ஆண்டில் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பா.ம.க., தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுத் தானியங்கள் உரியவர்களைச் சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1,900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக்குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்களுக்குச் சென்றடைய வேண்டிய உணவுத் தானியங்கள் முறைகேடான வழிகளில் திருப்பிவிடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது. 2022-23ம் ஆண்டில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள்மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாய விலைக் கடைகள்மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80% என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி பயனாளிகளைச் சென்றடையவில்லை என்றால், எங்குச் சென்றிருக்கும் என்ற வினாவுக்குப் பதிலளித்த ஆராய்ச்சி அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் அசோக் குலாட்டி, ” அந்த அரிசி வெளிச்சந்தையில் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். அதாவது நியாய விலைக்கடைகளில் மொத்தம் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி அப்பட்டமாகக் கடத்தப்பட்டிருக்கிறது என்பது தான் இதன் பொருள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *