மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல், பதற்றத்தைத் தணிக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானும் இதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர்ச்சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது.
மக்களவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் மேற்காசிய நிலவரம், எண்ணெய் விலை உயர்வு ஆகியன குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். மேற்காசியச் சூழல் குறித்துத் தமது அரசு பிப்ரவரி 20ஆம் நாள் விடுத்துள்ள அறிக்கையில், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாகவும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். அமைதிப் பேச்சு, அரசதந்திர முயற்சிகள் ஆகியவற்றின் மூலமே இப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


