
இந்தியாவின் பசுமை எரிபொருள் முன்னெடுப்பைப் பெட்ரோலியம் இறக்குமதியால் இலாபமடையும் குழுவினர் எதிர்த்து வருவதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உயிரி எரிவாயுத் தொழில்நுட்பம் குறித்த மாநாடு நடைபெற்றது. மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது சாண எரிவாயு, உயிரி எரிவாயு, எத்தனால் ஆகியவற்றால் ஊரகப் பொருளாதாரம் மேம்படுவதுடன் காற்று மாசுபாடு குறையும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 22 இலட்சம் கோடி ரூபாய்க்குப் பெட்ரோலியம், எரிவாயு ஆகியன இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதனால் இலாபமடையும் குழுவினர், மாற்று எரிபொருளுக்கு மாறுவதைத் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
அடுத்த சில ஆண்டுகளில் பசுமை எரிபொருள் தயாரிக்கும் துறையில் குறைந்தது ஐயாயிரம் நிறுவனங்கள் செயல்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.


