தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராகத் தன்னை முறைப்படி பதிவு செய்து இணைந்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி, இன்று கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயனுக்குள் ஒரு சிறந்த பாடலாசிரியரும் ஒளிந்திருக்கிறார்.
‘கோலமாவு கோகிலா’ படத்தில் இவர் எழுதிய “கல்யாண வயசு” பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, ‘டாக்டர்’ படத்தில் “செல்லம்மா”, “சோ பேபி”, ‘பீஸ்ட்’ படத்தில் உலகளவில் ட்ரெண்டான “அரபிக் குத்து”, மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் “சும்மா சுர்ருனு” எனப் பல ஹிட் பாடல்களைப் புனைந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதுவரை திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வந்த போதிலும், தற்போது எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்திருப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.இது குறித்துத் திரைத்துரையினர் தெரிவிக்கும் போது, “சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், எளிய வரிகளால் எளிய மக்களையும் கவரும் பாடலாசிரியராகவும் சாதித்து வருகிறார்.
சங்கத்தில் அவர் இணைந்துள்ளது அவரது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வ அங்கீகாரம்” என்று வாழ்த்தி வருகின்றனர். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது..



