7 மாநிலங்களைத் துண்டிப்போம்..வங்கதேச வன்முறையாளர்கள் கொந்தளிப்பு..!

Advertisements

வங்கதேசத்தில் மீண்டும் ஒரு முறை வன்முறை வெடித்துள்ளது. இந்த முறை இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளனர் வன்முறையாளர்கள். இதற்கான காரணம் என்னவென்று இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.

1971ஆம் நடந்த போரின் போது, பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. இந்தியா நடத்திய போரின் விளைவாகத்தான் வங்கதேசம் என்ற நாடே உருவானது. அப்போதிருந்தே, வங்கதேசம் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதாகப் பரவலாக அந்த நாட்டு மக்கள் கருதுவது உண்டு. குறிப்பாக, ஷேக் ஹசீனா இந்தியாவுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்கள் நடத்திய புரட்சியின் விளைவாக ஷேக் ஹசீனாவின் ஆட்சி வங்கேதசத்தில் இருந்து அகற்றப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேச அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது, மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளானார்கள்.

ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா மற்றும் வங்கதேச முன்னாள் உள்துறை அமைச்சரான அசாதுன்ஷா கானுக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரும், இந்தியாவில்தான் தஞ்சமடைந்துள்ளார். இவர்கள், இருவரையும் வங்கதேசத்தின் இப்போதைய அரசிடம் இந்தியா ஒப்படைக்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக அண்மைக் காலத்தில் வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு புரையோடிப் போய் இருந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் இனி நாங்கள்தான் ராஜா என்கிற ரீதியாக வங்கதேசப் பிரதமர் முகமது யூனுஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார். இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் இருந்து சர்வதேச எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை வங்கதேசக் கடற்படையினர் மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

டிசம்பர் 15ஆம் தேதி காலை 6 மணியளவில் இந்திய கடல் எல்லைக்குள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மேற்கு வங்க மீனவர்களின் படகு மீது வங்கதேசக் கடற்படையின் படகு ஒன்று மோதிக் கவிழ்த்துள்ளது. இதில், இந்திய மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர். இந்தச் சம்பவத்தில் 11 மீனவர்களை இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை மீட்டது. 5 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை.

இப்படி, இந்திய எதிர்ப்பு மனநிலையை வங்கதேச அரசு வெளிப்படையாகவே வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது. அதோடு, பாகிஸ்தானுடனும் வங்கதேசமும் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளன.1971ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி முதல்முறையாக வங்கதேசத்துக்கு 3 நாட்கள் விசிட் அடித்தார்.

அப்போது, வங்கக்கடலில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கான காரணம் என்ன?

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராகப் போராடிய மாணவர் தலைவர்களில் முக்கியமானவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி. இவர், வங்க தேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவை அப்புறப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். அதோடு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியையும் தடை செய்ய வேண்டுமென்பது இவரின் இலட்சியமாக இருந்தது.

இவரின், கோரிக்கையை ஏற்று இப்போதைய வங்கதேசப் பிரதமர் யூனுஸ், வரும் தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிடத் தடைவிதித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், உஸ்மான் ஹாடி இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹாடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வங்கதேசத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ஆம் தேதி அந்த நாட்டின் 13ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இதையடுத்து, விரைவில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டிருந்தார்.ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே மத்திய டாக்காவில் பினோய் நகர் பகுதியில் வைத்துச் சுடப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியதாக டாக்கா போலீஸ் கூறுகிறது.

இதில், படுகாயமடைந்த ஹாடி உடனடியாக, முதலுதவிச் சிகிச்சைக்குப் பிறகு, சிங்கப்பூர் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனின்றி டிசம்பர் 18ஆம் தேதி இரவு இறந்து போனார். 32 வயதேயான இளம் தலைவர் இறந்தது வங்கதேசத்தைக் கொந்தளிக்க வைத்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் கொழுந்து விட்டு எரிகிறது.

டாக்காவில் பல கட்டடங்கள், குடியிருப்புகள் தாக்கப்பட்டன. வங்கதேசத்தின் முன்னணிப் பத்திரிகைகளான டெய்லி ஸ்டார் மற்றும் புரோமல் ஆலோ ஆகியவற்றின் அலுவலகங்கள் தாக்கப்பட்டன. உள்ளே, பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள்.

இதற்கிடையே, வன்முறையாளர்கள் டாக்காவில் இந்து மதத்தைச் சேர்ந்த திப்பு சந்திரதாஸ் என்ற தொழிலாளியை எரித்துக் கொன்றுள்ளனர். முகமது நபி குறித்துச் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்ததாகத் திப்பு சந்திரதாஸ் மீது வன்முறையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்கு வங்கதேச இடைக்கால அரசு எக்ஸ் பக்கத்தில் கண்டனத்துடன் முடித்துக் கொண்டது. திப்பு சந்திரதாஸின் உறவினர்கள் புகாரளித்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று டாக்கா போலீசார் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, வன்முறையாளர்கள் இந்தியாவின் தூண்டுதலின் பேரில், ஹாடி கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்தியா குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். அதோடு, குற்றவாளிகளை ஒப்படைக்கும் வரை, டாக்காவிலுள்ள இந்திய தூதரகம் செயல்பட முடியாது, இப்போது மட்டுமல்ல எப்போதுமே செயல்பட முடியாது என்று அறிவித்துள்ளனர்.

இந்திய தூதரகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.எல்லாவாற்றுக்கும் உச்சக்கட்டமாக வங்கதேசத்தின் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஹசாந்த் அப்துல்லா வேறு விதமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வங்கதேசத்துக்கு எதிராகச் செயல்பட்டால் இந்தியாவின் 7 சகோதரி மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகலாயா, திரிபுரா, மிசோரம், நாகலாந்து மாநிலங்களை இந்தியாவிடம் இருந்து துண்டிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களை மேற்குவங்கத்தின் சிலிக்குரி கேரிடார் பகுதிதான் இந்தியாவுடன் இணைக்கிறது. மிகவும் குறுகலான இந்த சிலிகுரி கேரிடாரைச் சுற்றி நேபாளம், பூடான், வங்கதேச நாடுகளின் எல்லைகள் உள்ளன. சிலிகுரி முற்றிலும் இந்திய பகுதிக்குள் உள்ளது. நேரடியாக ராணுவ நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிலிகுரியைக் கைப்பற்றி, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைத் துண்டிக்க முடியும்.

ஆனால், அப்படி இந்தியாவுக்குள் வங்கதேசம் ராணுவத்தை அனுப்பினால், இந்திய ராணுவம் திருப்பி அடித்தால் வங்கதேசத்தால் தாங்க முடியாது. அப்படியிருக்கையில், இத்தகைய எச்சரிக்கையை வங்கதேச அரசியல் கட்சிகள் இந்தியாவுக்கு விடுக்கத் தொடங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளைக் குளிர்விக்கவே, இத்தகையை அறிக்கைகளை வங்கதேச அரசியல்வாதிகள் விடுப்பதாகத் தெரிகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *