புதுடில்லி: ‘வங்கதேச வன்முறையில் தியாகிகள் அவமதிக்கப்பட்டனர். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையைச் சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும்.’ எனப் பதவி விலகியது குறித்து ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
தேசிய துக்க தினம்
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: லட்சக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தை போராட்டக்காரர்கள் அவமதித்தனர். நாட்டு மக்களிடமிருந்து எனக்கு நீதி வேண்டும்.
மரியாதை
ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய துக்க தினத்தை உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கடைப்பிடிக்க வேண்டும். வங்கதேசத்தில் நடந்து வரும் கொலைகள் மற்றும் நாச வேலைகள்குறித்து விசாரணை நடத்த வேண்டும். தந்தை, தியாகிகள் அவமதிக்கப்பட்டனர். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையைச் சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும்.
கவலை
பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள் உயிரிழந்தனர். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையுடன் வாழ்பவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் நடந்த கொலைகள் மற்றும் நாசவேலைகளுக்கு காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடரும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

