
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி.
வளர்பிறையில் ஒரு சஷ்டி, தேய் பிறையில் ஒரு சஷ்டி திதி என மாதந்தோறும் 2 சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி பெரு விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதன் காரணமாக கந்த சஷ்டி பெருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சென்று 6 நாட்கள் அங்கேயே தங்கி, விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை பார்த்து கடலில் நீராடி அடுத்த நாள் முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு களித்து வீடு திரும்புவர்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி நவம்பர் 13-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.அமாவாசை மறுநாள் தொடங்கி ஆறு நாட்கள் முடிவில் 19-ஆம் தேதி முடியும். நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை முருக பெருமான் வேல் வாங்குதல், சூரபத்மனுக்கு தூது அனுப்புதல், போர் தொடங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நாடக வடிவில் நடைபெறும்.
நவம்பர் 18 -ஆம் தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறும். நவம்பர் 19-ஆம் தேதி ஞாயிறு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள பல முறைகள் உள்ளன. சிலர் ஆறு நாட்களும் வெறும் நீர் மட்டுமே அருந்தி சூரசம்ஹாரம் முடிந்த உடன் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பார்கள். சிலர் 6 நாட்களும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்வார்கள். சிலர் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது வழக்கம். சில 6-வது நாள் சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதையும் சாப்பிடாமல் இருந்து மறு திருக்கல்யாணம் செய்து விரதம் முடிப்பார்கள்.

இன்னும் சிலர் இளநீர் மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள். வேறு சிலர் வெறும் மிளகை மட்டும் சாப்பிட்டு மிளகு விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி தொடக்க நாளில் ஒரு மிளகு, 2-வது நாளில் 2 மிளகு என 6-வது நாள் 6 மிளகு சாப்பிட்டு கடுமையான விரதம் மேற்கொள்வார்கள்.
ஆணவம், வன்மம், குரோதம், காமம் போன்ற தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் நமக்கு கிடைக்கும். கந்த சஷ்டி விழாவில் சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் வெற்றிக் கண்டது போல் இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை கிடைக்கும். மேலும் 16 வகை செல்வங்களையும் முருகப்பெருமான் வழங்குவார் என்பது நம்பிக்கை.
விரத நாட்களில் கந்த சஷ்டி கவசம் படிப்பது, முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, திருப்புகழ் படிப்பது, ஓம் சரவண பவ என்று தினமும் 108 முறை எழுதுவது போன்றவற்றை செய்யலாம். முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்து வாழ்வில் வெற்றியையும், அனைத்து செல்வங்களையும் பெறலாம்.
