Sexual assault: திரைப்பட சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சித்திக்!

Advertisements

மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார்.

திருவனந்தபுரம்:கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நடிகர், இயக்குனர் மற்றும் கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகார்களில் சிக்கியதை அடுத்து, அம்மாநில பொதுச் செயலாளர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளாவின் நட்சத்திர அமைப்பான அம்மாவின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகாரை வைத்துள்ளார். 2019ம் ஆண்டு நடிகையை தாக்கிய வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டது தொடர்பாக சித்திக் மற்றும் கேபிஏசி லலிதா பேசிய செய்தியாளர் சந்திப்பின் காணொளியை மீண்டும் பகிர்ந்து நடிகை ரேவதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகர் சித்திக் மீதான குற்றங்களை பற்றி ரேவதி கூறுகையில், “நடிகர் சித்திக் அவரது மகன் நடிக்கும் தமிழ் படத்தில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். இது தொடர்பான என்னிடம் பேசி வந்தார். சித்திக் நடிப்பில் வெளியான ‘சுகமாரியாதே’ படத்தின் முன்னோட்டம் நடைபெற்றது. அது முடிந்ததும் என்னை திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு சித்திக் என்னிடம் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என்று நேரடியாக கேட்டார். அப்போது எனக்கு 21 வயது என்பதால் இந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு புரியவில்லை.

நான் அவரிடம் இதற்க்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். பிறகு நடிகர் சித்திக் நீண்ட நகங்களை கொண்ட பெண்களை எனக்கு பிடிக்கும் என்று என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். என்னை ஒரு மணி நேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சித்திக் அப்போது கூறினார். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று திமிராகவும் பேசினார். என்னைப் போன்ற பெண்களுக்கு விமன் இன் சினிமா மிகவும் ஆதரவாக உள்ளது. இது குறித்து எனது குடும்பத்தினரிடம் சொன்னேன், அவர்கள் எனக்கு ஆதரவாக நின்றார்கள். எனக்கு திரையுலகை சிறிது தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், மற்ற பெண்களின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சித்திக்குக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரது மகளுக்கும் இதே போன்ற சம்பவம் ஏற்பட்டால் சும்மா இருப்பாரா? திரையுலகில் இப்படி முகமூடி அணிந்து திரியும் நபர்களை பற்றி நினைக்கும் போது நான் வெட்கப்படுகிறேன்” என்று ரேவதி சம்பத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார். தன் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் வலு பெற்றதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவர் மோகன்லாலிடம் சமர்ப்பித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *