
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ஆர்த்தி (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாகப் பெற்றோர் மகளைக் காணவில்லை என்று முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுமி ஆர்த்தி சோலைநகரை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பது உறுதியானது.
தொடர்ந்து சோலைநகரில் வீடு, வீடாகப் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சோலை நகரையொட்டியுள்ள அம்பேத்கர் நகர் பகுதி மாட்டுக்கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் மாயமான சிறுமியின் கை, கால்களைக் கட்டி வெள்ளை நிற வேட்டியை கொண்டு மூட்டையாகக் கட்டி வாய்க்காலில் வீசியது தெரியவந்தது.
சிறுமி சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கூறி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் சிறிய தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், இந்த வழக்கைக் கொலை வழக்கமாக மாற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகக் கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் பின்னர் போலீஸ்க்கு பயந்து சிறுமியின் கை, கால்களைக் கட்டி உடலைக் கால்வாயில் வீசியதாகக் கூறியுள்ளனர்.

