
மேகதாது அணைத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தமிழக அரசும் விவசாயிகள் அமைப்புகளும் அளித்த மனுக்களை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளதாக மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷண் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மாறன் மேகதாது அணை தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், கர்நாடக அரசின் மேகதாது திட்ட அறிக்கை, காவிரி நீர் தீர்ப் பாயத்தின் தீர்ப்புக்கும், தற்போது நடைமுறையில் உள்ள மத்திய நீர்வள ஆணைய வழிகாட்டுதல்களுக்கும் இணங்க திருத்தப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்குமாறு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேகதாது திட்டம், காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களின் குடிநீர் கிடைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையை தெரிவித்து தமிழக அரசும், விவசாயிகள் அமைப்புகளும் அளித்த மனுக்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்குத் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், காவிரி நீர் தீர்ப்பாயத்தின் 2007ஆம் ஆண்டு தீர்ப்பில் இடம்பெற்றுள்ள 18ஆவது பிரிவு பொருத்தமானது என்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் மீண்டும் உறுதிபடுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்தப் பிரிவின்படி, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தங்களது எல்லைக்குள் உள்ள நீரை பயன்படுத்துவதற்கும். ஒழுங்குபடுத்துவதற்கும் உரிமையும் அதிகாரமும் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.




