
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கச் சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி அவரது ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது. அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.
வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
இருப்பினும், இதையடுத்து, மருத்துவ ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்யச் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. அதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.



