
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 05 ஆம் தேதி மனம்திறந்து பேசப் போகிறேன் என்றும் அதுவரை பொறுத்திருங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதன்பின் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்து திரும்பிய பின்னரே அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியானது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பயணத்தை தொடங்கிய போது செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 05 ஆம் தேதி மனம்திறந்து பேசப் போகிறேன் என செய்தியளார்களிடம் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை செங்கோட்டையன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியில் தனக்கான முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிச்சாமி கொடுப்பதில்லை என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


